×

மண்ணடி தொழிலதிபர் கடத்தல் விவகாரத்தில் 3 ஆண்டுகள் தலைமறைவான தீவிரவாதி கைது: சென்னை விமான நிலையத்தில் சிக்கினார்

சென்னை: மண்ணடி தொழிலதிபர் கடத்தல் விவகாரத்தில் 3 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த தீவிரவாதியை சென்னை விமானநிலையத்தில் போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்தவர் தவ்பிக் அமீது (42). இவர், தேசிய புலனாய்வு அதிகாரி போல நடித்து, 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 17ம் தேதி சென்னை மண்ணடியைச் சேர்ந்த தொழிலதிபர் திவான் (எ) அக்பரை கடத்தினார். அப்போது, தொழிலதிபர் அக்பர் ஹவாலா பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதை தெரிந்து வைத்துக்கொண்டு, என்.ஐ.ஏ அதிகாரி போல் நடித்து ரூ.3 கோடி பணத்தை பறித்துவிட்டு தவ்பிக் தப்பிவிட்டார்.

இந்த வழக்கில் தீவிரவாதி தவ்பிக்கின் மனைவி சல்மா உள்பட 6 பேரை முத்தியால்பேட்டை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் மட்டுமில்லாது பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய தவ்பிக் தலைமறைவாக இருந்து வந்தார். இதனால் அவரை பிடிக்க சென்னை போலீசார் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்தனர்.ஆனால், யாசிர், சோட்டு, பஷீர் என பல பெயர்களில் தவ்பிக் தங்கி வந்துள்ளார். இந்நிலையில், இலங்கையிலிருந்து தவ்பிக் சென்னைக்கு வருவதாக ரகசிய தகவல் வடக்கு கடற்கரை போலீசாருக்கு கிடைத்தது. அதன்பேரில் சென்னை விமான நிலையத்தில் வைத்து நேற்று முன்தினம் தவ்பிக்கை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

தொழிலதிபரை கடத்திய பிறகு ரூ.3 கோடி பணத்துடன் வங்கதேசத்திற்கு சென்று தவ்பிக் தலைமறைவானார். அந்த பணத்தை கொண்டு வெளிநாடுகளில் தவ்பிக் உல்லாசமாக வாழ்ந்தார். பணம் தீர்ந்த பிறகு மீண்டும் சம்பாதிப்பதற்காக கடத்தல் போன்ற சட்டவிரோத செயல்களில் அவர் ஈடுபடுவார். மேலும், போலி பாஸ்போர்ட் மூலமாக அவர் இலங்கையில் தலைமறைவாக வாழ்ந்து வந்துள்ளார். கடத்தல் சம்பவத்திற்கு பிறகு யாருக்கும் தெரியாமல் சென்னை வந்த தவ்பிக்கை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். தவ்பிக் மீது 14க்கும் மேற்பட்ட வழக்குகள் இந்தியா முழுவதும் நிலுவையில் உள்ளன.

குறிப்பாக 2002 முதல் 2008 வரை பல தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு போலீசாரிடம் சிக்காமல் இருந்து வந்துள்ளார். 2002ல் மும்பை பேருந்தில் குண்டு வைத்தது தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முதன்முறையாக உத்தரபிரதேசத்தின் நொய்டாவில் கைது செய்யப்பட்ட தவ்பிக், 2015ம் ஆண்டு வரை சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின்பு சிறையில் இருந்து வெளியே வந்த அவர், நாம் மனிதர் என்ற அரசியல் கட்சியை உருவாக்கி, அதன் மூலம் தமிழகத்தில் செயல்பட்டு வந்தார்.

மேலும் தீவிரவாத கும்பலுக்கு ஆள்சேர்க்கும் பணியிலும், நிதி திரட்டும் வேலையிலும் ஈடுபட்டதால் அவர்மீது தேசிய புலனாய்வு முகமை அமைப்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிராம்பட்டினம் கொலை வழக்கு என பல கொலை வழக்குகளும் தவ்பிக் மீது நிலுவையில் உள்ளன. மேலும் ஹவாலா பணப் பரிமாற்றத்தில் தீவிரமாக ஈடுபட்டு அதை தீவிரவாத அமைப்பிற்கு அளித்துள்ளார். பல பயங்கர வழக்குகளில் தொடர்புடைய தவ்பிக் தொடர்ந்து ஹவாலா பண பரிமாற்றத்தில் சென்னையில் ஈடுபட்டு வந்துள்ளார். தவ்பிக்கை கைது செய்த போலீசார், அவரை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post மண்ணடி தொழிலதிபர் கடத்தல் விவகாரத்தில் 3 ஆண்டுகள் தலைமறைவான தீவிரவாதி கைது: சென்னை விமான நிலையத்தில் சிக்கினார் appeared first on Dinakaran.

Tags : Mannadi ,Chennai airport ,Chennai ,Chennai airport.… ,
× RELATED சென்னை விமான நிலையம் முதல்...